தூத்துக்குடியில் ரூ.1000 கோடியில் சர்வதேச பூங்கா உருவாக்க தமிழக பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்திருப்பதற்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை, 2021 – 2022-ம் ஆண்டிற்கான அரசின் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் பற்றி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் பாராட்டுகிறது. தமிழக அரசின் 2021 – 2022-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சிறப்பு அம்சமாக சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1000 கோடியில் சர்வதேச பூங்கா உருவாக்க நிதிஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சுமார் 3.5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.
அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கோரிக்கைகளான தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 60 ஆடுனு கொள்ளளவு கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், தூத்துக்குடியில் டைடல் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு விளையாட்டை மேம்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறைக்கு ரூ.225 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், தமிழகத்தில் 6 மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கும் விதமாக ரூ.1149 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் சிறப்பம்சமாக உள்ளது. திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு ரூ.6200 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் பலர் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்குவதற்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.60 கோடி திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. மேலும், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17899 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், சாலை பாதுகாப்புத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. மொத்தத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் 2021 – 2022ம்ஆண்டிற்கான பட்ஜெட் சிறப்பம்சங்களுடன் கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது என இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்றுள்ளது.

