தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (55). இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறி கடையை நடத்தியதாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின், அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார். மறுநாள் அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தார். சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். எஸ்.ஐ..க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு ஆய்வுக்கு பின் இரவு 8.10 மணியளவில் தொடங்கிய பிரதே பரிசோதனை 11.35 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்த உடல்களை பெறப்போவதில்லை எனவும் அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்யவேண்டும் எனவும் அப்போதுதான் உடலை பெறுவதாக தெரிவித்து கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திவந்தார்கள் இந்நிலையில் உயர் அதிகாரிகள் பேச்சுவார்தைபோது உயர்நீதி மன்றம் நேரடியாக தலையீட்டுள்ளதால் தங்களுக்கு நியாயமான நீதி கிடைக்கப்பெறும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் தற்போது உயர்நீதி மன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக தங்களது தந்தை மற்றும் சகோதரர் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர் தங்களது சொந்த ஊர் சாத்தான்குளத்தில் இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது இதனால் போலீஸ்சார் சாத்தான்குளம் சுற்றுவட்டரா பகுதியில் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்
செய்தி தொகுப்பு
எம் ஆத்திமுத்து
கொம்பன் ராஜ்

