தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவின்போது, கொரோனா நேரத்தில் கூட்டம் போடாதீங்க என்று சொன்ன திமுக பிரமுகர் இன்று அதிகாலையில் நான்கு பேர் கொண்ட கும்பலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சண்முகபுரம், வண்ணார் இரண்டாவது தெருவை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் நடராஜன் (வயது38). இவர் தூத்துக்குடி ராமசாமிபுரம் முதல் தெருவில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதோடு 45வது வட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார்.
நடராஜன் நேற்று இரவு தாமோதர நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு கோவில் கொடை விழாவில் பங்கேற்றார். கொடை விழாவின்போது அங்கு நிறைய பேர் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர். இதனைக்கண்ட நடராஜன் அங்கிருந்தவர்களிடம் கொரோனா நோய் தொற்று காலத்தில் கூட்டம் போடாதீங்க, தள்ளி தள்ளி நில்லுங்க என்று சொல்லியுள்ளார்.
இதனால், அங்கு நின்ற வண்ணார் முதலாவது தெருவைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகன் தங்ககார்த்திக் என்ற ஆடு கார்த்திக் (28) என்பவருக்கும் நடராஜனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய நடராஜன், கோவிலிருந்து கொண்டு வந்த பூக்கள் மற்றும் பொருட்களை தனது அலுவலகத்தில் வைத்துவிட்டு திரும்பியிருக்கிறார்.
அப்போது அங்கு அதிரடியாக வந்த 4பேர் கும்பல் நடராஜனை சராமரியாக கத்தியால் குத்தி விட்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. கத்தி குத்தில் பலத்த காயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுண் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட நடராஜனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்டபாக கார்த்திக் என்ற ஆடு கார்த்திக் (28) மற்றும் பெருமாள்புரத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டி மகன் அருண்குமார் (22), ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
திமுக பிரமுகர் அதிகாலையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

