கோவில்பட்டி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள், ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 வீடுகளில் தங்க நகை, பணம், ஒருவரிடம் பணம் வழிப்பறி செய்தது மற்றும் 4 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடு போயிருந்தது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து, கைது செய்து, திருடு போன நகை, பணம் மற்றும் திருடு போன பொருட்களை மீட்குமாறு கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் அடங்கிய 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
மேற்படி தனிப்படையினர் ஆங்காங்கே பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், அறிவியல் ரீதியாக பல விசாரணைகளை மேற்கொண்டதில் தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் கள்ளம்புளி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (எ) கோவிந்தன் என்பவரின் மகன் ரவி என்ற கார்த்திக் (38) என்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின் மேற்படி தனிப்படையினர் எதிரியை பிடிப்பதற்கு பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ஏழாயிரம் பண்ணை ரோடு சந்திப்பு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த எதிரி ரவி என்ற கார்த்திக்கை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி விசாரணையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வீடுகளில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடியது, 1 வழிப்பறி வழக்கு மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் திருடியது என மொத்தம் 7 வழக்குளிலும் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய 1 வழக்கிலும், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய 1 வழக்கும், ஒரு இரு சக்கர வாகனம் திருடிய வழக்கு என 2 வழக்குகளும்,
இது தவிர விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து வெள்ளி சாமான்கள் திருடிய ஒரு வழக்கிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே 90 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பின் மேற்படி தனிப்படையினர் எதிரி ரவி என்ற கார்த்திக் என்பவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், பணம் ரூபாய் 2 லட்சம் மற்றும் 4 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை கண்டுபிடித்து, கைது செய்து, அவரிடமிருந்த தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், பணம் மற்றும் இரு சக்கர வாகனங்களை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

