தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான பெருவிழா திருப்பலி இன்று (ஆக. 5) பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசின் வழிகாட்டுதல்படி திருவிழா திருப்பலி நடைபெற்று வந்தது. சிகர நிகழ்ச்சியான பெருவிழா திருப்பலி இன்று (ஆக. 5) காலை 7.30 மணிக்கு மக்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு, கூட்டுத் திருப்பலி நடத்தினார்.
தொடா்ந்து, காலை 10 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் தலைமையிலும், மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையிலும் திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தூய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் நிகழ்ச்சி, நற்கருணை ஆசிருடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.
அனைத்து நிகழ்ச்சிகளும் டிவி மற்றும் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது. பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவிழாவையொட்டி தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி கணேஷ் ஆகியோரது தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

