தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 28.07.2021 அன்று கிடைத்த ரகசிய தகவலின் படி குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவைப்பார் பகுதியில் ரோந்து செல்லும் போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த காரை சோதனையிட்டு கார், மற்றும் அதில் இருந்த 76 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, எதிரிகள் 3 பேரையும் கைது செய்த விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. முருகன், குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வன், முதல் நிலை காவலர்கள் திரு. ராசையா, காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. முத்து காமாட்சி, சங்கரலிங்கரபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் திரு. பால்ராஜ்,குளத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரு. ராஜசேகர், காவலர்கள் திரு. ஜோசப் சந்திரசேகர், திரு. ஜேசு பாக்கிய சத்ரியன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி ஈடுபட்ட வழக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்து கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்தும், மற்றொரு நிலமோசடி வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்த தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. நாராயணன், திரு. சரவண சங்கர், பெண் தலைமை காவலர் திருமதி. சுமதி, முதல் நிலை காவலர்கள் திருமதி. ஜெயரூபி, திரு. சித்திரவேல் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் உட்கோட்ட போக்குவரத்து பிரிவிலிருந்து TMB வங்கியுடன் நல்லுறவை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் 100 இரும்பு தடுப்பு வேலிகள் திருச்செந்தூர் கோட்டத்திற்கு பெற்றுத்தந்த திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், தலைமை காவலர் திரு. சண்முகம், முதல் நிலை காவலர்கள் திரு. ராஜ உடையார், திரு. ராமச்சந்திரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர் லாரி கிளீனராக ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி வந்தவர் மனைவி பிள்ளைகளை பார்க்காமல் மனவருத்தத்தில் கடந்த 26.07.2021 அன்று தற்கொலைக்கு முயன்று காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவருக்கு முதல் உதவி செய்து சாரம், சட்டை மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கியும், சாப்பாடு தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட சிப்காட் காவல் நிலைய பெண் முதல்நிலைக் காவலர் திருமதி. சுந்தரி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
2 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

