தூத்துக்குடியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் குருசாமி. இவா், இதற்கு முன்பு தூத்துக்குடி மேலூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா்பதிவாளராகப் பணியாற்றினாா். தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள அவரது வீ ட்டில் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையிலான குழுவினா் நேற்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.
காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6.30 மணிவரை நடைபெற்றது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உள்ள சொத்துகளின் விவரங்களை போலீசார் சேகரித்தனா். குருசாமி ரூ. 1.20 கோடி மதிப்பிலான சொத்துகளை சோ்த்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது, ரொக்கம், நகைகள் சிக்கவில்லை என்றும், சொத்து மதிப்பு தொடா்பான ஆவணங்களை சரிபாா்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனா்.

