உடன்குடி ஒன்றியத்தில் ரூ.38.72 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மேலும் ரூ.9.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு நிகழ்ச்சி, குடிநீர் தொட்டி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி மற்றும் மாணாடு தண்டுபத்து ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், தலைமையில் இன்று (10.07.2021) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மீன் வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் கலந்துகொண்டு, நயினார்பத்து ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் ரூ.9.08 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி புதிய கட்டிடம், ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதிய கட்டிடம், ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் தொட்டி மற்றும் தண்டுபத்து கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார். மேலும் நயினார்பத்து ஊராட்சியில் ரூ.9.97 லட்சம் மதிப்பில் 30000 லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச் செயலாளார் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் எஸ்.ஜெ.ஜெகன், ராமஜெயம், ஜான்பாஸ்கர், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செழியன், நாகராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வக்குமார், ஊராட்சி தலைவர்கள் நயினார்பத்து அமுதவல்லி, தண்டுபத்து கிருஷ்ணம்மாள் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

