மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடந்தது. இதில் 43 பேர் இடம்பெற்றனர். புதிய மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்துள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரவையில், புதிதாக 15 அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின் தொலைபேசி வழியே எல். முருகனை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

