திருச்செந்தூர் அருகே குடிபோதையில் நண்பனை கொலை செய்த நான்கு பேர் கைது – விரைந்து கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பள்ளி அருகே திருச்செந்தூர் ஜீவா நகரை சேர்ந்த லெட்சுமணன் மகன் சிவமுருகன் (24) என்பவர் மர்மநபர்களால் கம்பால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவமுருகனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்ஜெயக்குமார் எதிரியை விரைந்து கைது செய்ய திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட சிவமுருகன் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 17.06.2021 அன்று தனது சொந்த ஊரான திருச்செந்தூர் ஜீவா நகருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (01.07.2021) தனது நண்பர்களான திருச்செந்தூர் வீரபாண்டியபட்டிணம் குறிஞ்சி நகரை சேர்ந்த சங்கர் மகன் சண்முகசுந்தர் (25), திருச்செந்தூர் சரவணபொய்கை ரோடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வண்ணமுத்துகுமார் (24), திருச்செந்தூர் கல்யாணசுந்தர நகரைச் சேர்ந்த பழனி மகன் முருகானந்தம் (25) மற்றும் திருச்செந்தூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் (25) ஆகியோருடன் சேர்ந்து திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பள்ளி அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சண்முகசுந்தர் உள்ளிட்ட நண்பர்கள் நான்கு பேரும் சிவமுருகனை கம்பால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகசுந்தர், வண்ணமுத்துகுமார், முருகானந்தம், கார்த்திக் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் நண்பனை கொலை செய்த எதிரிகளை விரைந்து கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

