தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன. சாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் இழப்பு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17-ம் தேதி, 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன.4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் அதேபோன்ற நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையில் பெரியமேடு எஸ்பிஐ கிளையின் மேலாளர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடடைபெற்று வந்தது. இந்த நிலையில் அரியானா மேவாக்கில் குற்றாவாளிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் பணம் சரியாக உள்ளதா என சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

