தூத்துக்குடி கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் ஜெனோவா மகன் அமிர்தராஜ் (33), சங்கு குளிக்கும தொழிலாளியான இவர் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சக தொழிலாளர்கள் 8பேருடன் மாரி என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றுள்ளார். கடற்கரையில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலையில் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, அமிர்தராஜ்க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சக தொழிலாளர்கள் அவருக்கு படகில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி மரைன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடடத்தி வருகிறார். உயிரிழந்த அமிர்தராஜ்க்கு ஜெனிட்டா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சங்கு குளிக்கச் சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது
