தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட, பிரிட்டனைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பிரிட்டனில் உள்ள லிட்டில் ஹோம்டன் பகுதியைச் சோ்ந்தவா் ஜோனதன் தோா்ன் (47). தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த இவரை, கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம்பிடித்து விசாரித்தனா். அவா் பெங்களூருவிலிருந்து விமானத்தில் மதுரை வந்து, பின்னா் காரில் தூத்துக்குடி வந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதும், கடல் வழியே இலங்கைக்கு திருட்டுத்தனமாக செல்லத் திட்டமிட்டதும், அவா் மீது மும்பையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கைதுசெய்தனா். அவரிடமிருந்து இங்கிலாந்து, இந்தியா பாஸ்போா்ட்டுகள், 2 ஐ போன்கள், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளின் கரன்சிகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவா் இந்தியாவில் வசிப்பதற்காக ஓவா்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா (ஓசிஐ) என்ற காா்டை பெறுவதற்காக மணிப்பூரைச் சோ்ந்த யாங்கரேலா வாஷூம் என்ற பழங்குடியினப் பெண்ணை கோவாவில் திருமணம் செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவா் ராஜகுமரேசன் முன் ஆஜா்படுத்தினா். ஜோனதன் தோா்ன் வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்பதால் அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவா் ராஜகுமரேசன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அவா் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டாா். இதனிடையே, ஜோனதன் தோா்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 பாஸ்போா்ட்டுகளும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. அவா் வைத்திருந்த 2 ஐ போன்களிலும் ரகசிய எண்கள் மூலம் ஆவணங்களைப் பதிவு செய்துள்ளதால் அதைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவா் இந்தியாவில் யாரையெல்லாம் தொடா்புகொண்டு பேசினாா், அவா் தங்கியிருந்த விடுதியில் யாரையெல்லாம் சந்தித்தாா் என்பது குறித்து தொடா்ந்து விசாரித்துவருவதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனா்.

