குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில் இஸ்ரோ நில எடுப்பில் கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், இன்று (10.06.2021) கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு நிலஎடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாதவன்குறிச்சி ஊராட்சி கூடல்நகர் பகுதியை சேர்ந்த 33 குடியிருப்புகள் நில எடுப்பு பகுதிக்குள் வருகிறது. அவர்களுக்கு வீடு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைக்க தாங்கையூர் பகுதியில் இடம் இன்று பார்க்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் பார்வையிடப்பட்டு கூடல்நகர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க இடம் மாற்றி அவர்களுக்கு வசதியுடன் குடியிருப்பு அமைத்து தரப்படும். இஸ்ரோ நில எடுப்பு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகவேல், இஸ்ரோ நில எடுப்பு வட்டாட்சியர்கள் ராஜூ, ரவிகலா, அற்புதமணி, செல்வி, நாகசுப்பிரமணியன், சிவகாமசுந்தரி, உடன்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், பொற்செழியன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

