கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது – எதிரியை கைது செய்த கழுகுமலை காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சோபா ஜென்சி தலைமையில் உதவி ஆய்வாளர் காந்திமதி, காவலர் முத்துராமன், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ரமேஷ் ஆகியோர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த பழனி மகன் சுரேஷ் கண்ணன் (27) என்பவரது வீட்டருகே உள்ள குடோனை சோதனை செய்த போது அதில் 16 மூடைகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி போலீசார் எதிரி சுரேஷ் கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோத தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக அவரது குடோனில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் கண்ணனை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 5,00,000/- மதிப்புள்ள 437 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி எதிரியை கைது செய்து, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த கழுகுமலை காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 685 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 687 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிமிருந்து 3800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் ஈடுபடவர்கள்.
எனவே இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மற்றும் சட்டவிரோதமாக கள் இறக்குவது, சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இதில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக் கதிரவன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

