தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் 150 திருநங்கைகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150 திருநங்கைகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ உளுந்தம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்ட கரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கோஸ்டல் எனர்ஜி நிறுவனத்தின் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பில் 200 ஆக்சிஜன் ப்ளோமீட்டர்களை கனிமொழி எம்பியிடம் நிறுவன மேலாளர் பரமேஸ்வரன் வழங்கினார். மேலும், துடிசியா தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கனிமொழி எம்பியிடம் துடிசியா சேர்மன் நேரு பிரகாஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் பாலு, ஸ்பிக் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் கௌரி, வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, கோஸ்டல் என்ர்ஜி நிறுவன மேலாளர் (திட்டம்) விஜய் ஆறுமுகம், கோஸ்டல் எனர்ஜி நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

