சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட நியாயவிலைக் கடையின் பூட்டை உடைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகை 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை திருடிய நபர் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களை முற்றிலும் தடுக்குமாறும் மேலும் திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் IPS., உத்தரவிட்டுள்ளார்.
அவருடைய உத்தரவின் பேரிலும் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளர் (தெற்கு)கண்ணன்
( இ கா.ப) மற்றும் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் மற்றும் தெற்கு மண்டல இணை ஆணையாளர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன்
(இ.கா.ப)ஆகியோரின் ஆலோசனைகளின் படியும் அடையாறு மாவட்டம் துணை ஆணையாளர் விக்ரமன் அறிவுரையின்படி அடையாறு மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டும் தனிப்படையினர் மூலமும் கண்
காணிக்கப்பட்டு
வருகிறது.
இந்நிலையில் சைதாப்பேட்டை காவல் நிலைய சரகம் காவேரி நகரில் அமைந்துள்ள நியாய விலைக் கடையின் மேலாளராக குணசேகரன் வயது 35 என்பவர் பணிபுரிந்து வருகிறார். தற்போது ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் 2000 ரூபாய் வழங்கப்படுவதை ஒட்டி மேற்கண்ட நியாய விலை கடைக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக கடையில் வைத்திருந்த மானியத் தொகையான 736000 ரூபாய் பணத்தை கடந்த 16/05/2021 ம் தேதி, இரவு கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அடையாறு துணை ஆணையாளர் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமை காவலர் புருசோத்தமன், முதல்நிலைக் காவலர் செந்தில் மற்றும் காவலர்கள் பாண்டியராஜ் மற்றும் பாரதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டதில் சின்ன காஞ்சிபுரம் வேங்கை வீதி தெருவை சேர்ந்த கோபி என்ற
ஊமை கோபி (வயது 36) என்பவரை கைது செய்தனர்.
இவரை விசாரணை செய்ததில் இவர் பேச முடியாத மாற்றுத் திறனாளி என்பதும் ஆனால் இவர் தொடர்ந்து திருட்டு செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பதும், ஏற்கனவே 6 குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதும், விடுதலையான பின்னர் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதும் மேலும் இவர் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையம், அரக்கோணம் காவல் நிலையம் மற்றும் துரைப்பாக்கம் காவல் நிலையங்களில் வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவரை மேலும் விசாரணை செய்ததில் இருந்து
16/05/2021 ஆம் தேதி இரவு காவேரி நகர் சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருட முயன்றதும் இந்நிலையில் பெட்டியில் வைத்திருந்த 736000 ரூபாய் திருடிவிட்டு தனது சொந்த ஊரான சின்ன காஞ்சியில் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட பணத்தில் 4,45,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டுள்ளார்.
மேற்கண்ட வழக்கில் குற்றவாளியை கண்டறிவது சவாலாக இருந்த போதிலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை கண்டறிந்து திருடப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்தமைக்கு சைதாப்பேட்டை உதவி ஆணையாளர் அனந்தராமனின் தனிப்படையினரை காவல் ஆணையாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


