தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் சாலை விபத்தில் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் (54) அவர்கள் சிறப்பு அலுவலாக தூத்துக்குடி நகர காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22.05.2021 அன்று காலை 10 மணியளவில் பணி நிமித்தமான இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு தஸ்நேவிஸ் பள்ளி அருகில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (30.05.2021) மதியம் 2 மணியளவில் காலமானார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இவர் 1988ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி, பதவி உயர்வுகள் பெற்றவர். இவருக்கு திருமதி. வெங்கடலெட்சுமி என்ற மனைவியும், திருமதி. துர்காதேவி என்ற மகளும், கல்லூரியில் பி.காம் 3வது ஆண்டு பயின்று வரும் செந்தில் முருகன் என்ற மகனும் உள்ளனர்.
அன்னாரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான செக்காரக்குடியில் இன்று (31.05.2021) காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயசீலன், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


