ஈரோடு அருகே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே
ஆக்ஸிஜன் வசதியுடன் 550 படுக்கைகள் கொரோனா சிகிச்சை பிரிவாக
செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் 300
படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை வீட்டு வசதித்துறை
அமைச்சர் முத்துச்சாமி மே 28ம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். பின்னர்
மருத்துவமனைகளில் நோய் தடுப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். இங்கு
சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனா
சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதை
தொடர்ந்து கூடுதல் படுக்கைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்ததை தொடர்ந்து, ஆக்ஸிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட
கொரோனா சிகிச்சை பிரிவு கூடுதலாக தொடங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள்
ஆகியவற்றில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 4000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அனைத்து அடிப்படை
வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஈரோடு மாவட்டத்தில்
கோபிசெட்டிபாளையம், நம்பியூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா
நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் முத்துச்சாமி; ஆய்வு
மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கதுரை,
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி, துணை
முதல்வர் டாக்டர் சந்திரபோஸ் மற்றும் மருத்துவக்கல்லூரி துறைத்தலைவர்கள்,
பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

