எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 420 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மினி லாரியில் கடத்தி வந்த 2 பேர் கைது – எதிரிகளை கைது செய்த எட்டயாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.*
*தூத்துக்குடி மாவட்டத்தில் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு வழக்கமாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (19.05.2021) ஒரு மினி லாரி மூலம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த மினி லாரியை மடக்கிப்பிடித்து சோதனiயிடுமாறு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார்.*
*அதன்படி விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது, தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ், தலைமைக் காவலர்கள் திரு. காமாட்சி, திரு. கலியுகவரதன், திரு. கனகராஜ், திரு. செல்லச்சாமி, காவலர் திரு. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய போலீசார் எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டயாபுரம் – கோவில்பட்டி சாலையில் மேற்படி மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.*
*மேற்படி மினி லாரியின் மேல்புறத்தில் அழுகிய முட்டைக் கோஸ் மற்றும் காலி பிளவர் மூட்டைகள் இருந்தது, அதற்கு அடியில் 24 வெள்ளை நிற சாக்கு மூட்டையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 420 கிலோ போதை தரக்கூடிய புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து எட்டயாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மினி லாரியின் உரிமையாளரான விளாத்திகுளம் பனையடிபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லக்கனி மகன் கண்ணன் (35) மற்றும் மினி லாரி ஓட்டுனரான பனையடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் பழனிவேல் (31) ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து மேற்படி தடை செய்யப்பட்ட 420 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.*
*உடனடியாக மேற்படி வாகனத்தை மடக்கிப்பிடித்து, மேற்படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் தலைமையிலான போலீசாரையும், மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் துரிதமாக செயல்பட்டு தகவல் கொடுத்த உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் பாபுவையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.*
*தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கரை மாதங்களில் மட்டும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 பேர் கைது செய்யப்பட்டு, 43 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்துபவர்கள் மட்டும் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர், இதுவரை மொத்தம் 70 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்களை சீரழிக்கக்கூடிய போதைப் பொருட்களை கடத்துவது மற்றும விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரித்துள்ளார்.*


