காஞ்சீபுரம் அருகே புள்ளலூர் பகுதியில் வசிப்பவர் சங்கரன் (வயது 55). இவர் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ரத்தினமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் திடீரென சிகிச்சை பலனின்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் காஞ்சீபுரம் ஓரிக்கையை சேர்ந்தவர் குணசேகரன் (60). இவர் காஞ்சீபுரம் மாவட்ட உளவுத்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த 15-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, காஞ்சீபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.
மேலும், காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓய்வுபெற்றவர் சப்- இன்ஸ்பெக்டர் ஏகம்பன் (71). இவர் தன் மனைவி அன்னபூரணியுடன் (69), காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ராமசாமி நகரில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சை முடிந்து தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில், வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மயங்கிய நிலையில் நேற்று காலை வீட்டில் இறந்து கிடந்தனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரே நாளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் என 3 பேர் உயிரிழந்தது, காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

