கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் இரண்டு வாரத்திற்கு அமலுக்கு வந்துள்ளதையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக அதிகம் கூடும் இடங்களில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.*
*தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று (10.05.2021) முதல் 24.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் பொதுமக்கள் கூடுமிடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையும், பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியே வந்தவர்களை திருப்பியனுப்பி வருகின்றனர்.*
*முழு ஊரடங்கு இன்று முதல் அமலில் இருந்து வருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (10.05.2021) தூத்துக்குடி மாநகர் முழுவதும் ரோந்து சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காய்கனி மார்கெட் பகுதி மற்றும் புதிய பேரூந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கூட்டத்தையும், காவல்துறையினரின் பணிகள் குறித்தும் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தார்.*
*அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இன்று (10.05.2021) முதல் 24.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறிகடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளில் உள்ள காவல்துறையினர் அங்குள்ள பொதுமக்களை அப்புறபடுத்தி வருகின்றனர்.*
*மேலும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கூறினார்.*
*இந்நிகழ்வின்போது தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. செந்தில் சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துகிருஷ்ணன், திரு. வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.*

