சமூக வலைதளத்தில் 11-ம் வகுப்பு மாணவன் பெயரில் ஒரு மெசேஜ் வைரலாகிக்கொண்டிருந்தது. அதில், “எனது பெயர் ஆர்னவ் ரத்தோர். நான் சென்னை மயிலாப்பூரில் உள்ள எம்.சி.டி.எம் இன்டர்நேஷனல் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். இது நம் அனைவருக்கும் சோதனைக் காலமாகும்.
கோவிட் 19- என்ற தொற்று நோயின் காரணமாக நமது நகரங்களில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் நமது அன்றாட வாழ்க்கை முறையும் பாதிப்படைந்துள்ளது. நமது அரசு அனைத்துவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைளையும் உதவிகளையும் செய்து வந்தாலும், மேலும் கூடுதல் உதவி தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இத் தொற்று நோயினால் அதிகம் பாதிப்படையக்கூடிய வயதான நடமாட முடியாத மூத்த குடிமக்களுக்கே அதிகமான உதவி மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது.
மேலும், அவர்களால் தங்களுக்குத் தேவையானதைத் தானாகப் பூர்த்தி செய்ய முடியாமலும் அத்தியாவசியத் தேவைகளை அணுக முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, நலிவடைந்த, உதவி தேவைப்படுகின்ற 2 நபர்களுக்குத் தொடர்ந்து 7 நாள்களுக்கு தேவைப்படும் உணவு பொருள்களான அரிசி, பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் பால் பவுடர் அடங்கிய உணவு பையினை அவரவர் வீட்டிற்கே சுகாதார முறையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த முயற்சிக்கு எனக்கு உறுதுணையாக எனது நண்பர்கள் மற்றும் ஆரண்யா அறக்கட்டளையினர் இணைந்து உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
முதற்கட்டமாக மயிலாப்பூர், ராயபுரம் பகுதிகளை இலக்காக கொண்டுள்ளோம். ஆகவே, உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ உதவி தேவைப்பட்டால் தயவுசெய்து 9818316654 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பியோ 9444352542 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். எங்களது இந்த உதவியானது இலவசமாகச் செய்யக்கூடிய தன்னார்வ சேவை ஆகும். எங்களது இந்த முயற்சியானது நிலையில்லா துன்பங்களை மட்டுப்படுத்துவதற்காக ஒரு சிறிய பங்களிப்பாகும். இந்தச் சேவையில் நமது அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரித்தபோது ஆர்னவ் ரத்தோர், ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் மகன் என்று தெரிந்தது. அவரிடம் பேசினோம். “என்னுடைய மனைவி சில்பம் கபூர் ரத்தோர், ஆர்ன்யா ஃபவுண்டேசன் என்ற என்.ஜி.ஓ-வை நடத்தி வருகிறார். இந்த என்.ஜி.ஓ மூலம் டெல்லி, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மையம் ஆகிய இடங்களில் தினமும் 350 சாப்பாடுகளை வழங்கி வருகிறார். உணவுகளை வழங்க ஆர்னயாவையும் அவர் அழைத்துச் செல்வார். அப்போது முதல் ஆர்னவ் ரத்தோருக்கும் உதவி செய்யும் எண்ணம் ஏற்பட்டது.
லாக் டவுன் அமல்படுத்தப்பட்டவுடன் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் சிரமப்படும் சீனியர் சிட்டிசன்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஆர்னவ் ரத்தோர் ஆசைப்பட்டார். அவரின் விருப்பத்தை அம்மாவிடம் கூறியதும் அதற்கு அவரும் ஓகே என்று கூறினார். உடனடியாக சமூகவலைதளங்கள் மூலம் தகவல்களைத் தெரிவித்தோம். அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பருக்கு பலர் போன் செய்து உதவிகளைக் கேட்டனர். உடனடியாக அவர்களுக்கு 350 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருள்கள், அரிசி, பால்பவுடர் ஆகியவற்றை ஆர்னவ் அவரின் நண்பர்கள் அசத், சரண் ஆகியோருடன் சேர்ந்து வழங்கி வருகிறார்” என்றார்.
ஆர்னவ் ரத்தோர் கையிலிருக்கும் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் உதவிகள் கேட்டு மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன.


