தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க குழு அமைத்து அது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசின் அரசாணை:
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் பல மருத்துவனைகளில் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல நாடுகளும் நமது நாட்டிற்கு இலவசமாக ஆக்ஸிஜனை அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினரும் ஒருமித்த கருத்தை தெரிவித்ததன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்ஸிஜன் தொழிற்சாலை குறித்த தொழில்நுட்ப அறிவு சார்ந்த அரசு அதிகாரி என 7 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

