18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் இலவச தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதற்கான பதிவு ஏப்ரல் 26ந்தேதி முதல் துவங்லாம் எனக்கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் மே முதல் தேதியிலிருந்து இலவச தடுப்பூசி போட்டுக கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு இலவச தடுப்பூசி முகாம்களில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படியில் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அறிவித்தபடி இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லரை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி இலவசமாக வழங்க, இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே1-ம் தேதி முதல் நடத்தப்படும்.
அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும். 60 சதவீதத்திற்கு மேல் எதிர்ப்பு சக்தியை மக்களிடையே ஏற்படுத்துவதே முக்கிய குறிக்கோள். இந்நிலையை மாநிலம் எட்டிவிட்டால் நோய்ப்பரவல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும். இதையே முக்கிய யுக்தியாக கொண்டு செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு, தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

