தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தூத்துக்குடி காவல்துறை சார்பாக குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கரோனா பரவாமல் தடுப்பதற்கான அரசு விதித்துள்ள நெறிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எஸ்பி பேசுகையில், கரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200/- அபராதம் விதிக்கப்படும். மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு நாளை முதல் கல்யாண மண்டபங்கள், பொதுகூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க சில கட்டுபாடுகளை விதித்துள்ளது.
எனவே நாம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என்றார். பின் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் முருகபெருமாள், காமராஜ் வெங்கடேஷ் மற்றும் தனிப்பரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், தலைமைக் காவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

