பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாளையங்கோட்டை திருநகர் பகுதியில் கூட்டுறவு சார்பதிவாளர் செல்வகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது அவரிடம் ரூ.12 லட்சத்து 17 ஆயிரத்து 400 இருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர், தச்சநல்லூரை சேர்ந்த மகேஷ் என்பதும், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
அந்த பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து செல்வதாக அவர் கூறினார். ஆனால், அதற்கு முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.ே தர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

