தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் தமாக வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் இரட்டை இலை சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர்களாக செயல்பட்டதால், ஒரு தரப்பினர் விஜயசீலனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதும், மற்றொரு தரப்பினர் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதும் தொடர்ந்தது. இதனால், திமுகவினர் தங்கள் வெற்றி உறுதி என வீறுநடை போட்டு வந்தார்கள்.
தூத்துக்குடி அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் செயல்பட்டு வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு முன்தினம் வரை இவர் தான் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒபிஎஸ் ஆகியோர் கையில் கட்சி சென்றவுடன் தூத்துக்குடி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு என இரண்டு மாவட்டச் செயலாளர்களை நியமித்து சி.த.செல்லப்பாண்டியனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்து கட்சிக்குள் எந்தவித கோஷ்டி மோதலும் இல்லாமல் இராணுவ கட்டுப்பாட்டோடு தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர்களை ஒருங்கிணைத்து வந்த சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தூத்துக்குடி மாநகர பகுதியில் வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் போன்ற பதவிகளுக்கு பல சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டு, மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் மற்றும், அரசியலில் புதிதாக வந்தவர்கள், அடிப்படை கட்சிப்பணிகள் கூட தெரியாதவர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டதாகவம், அதே சமயத்தில் சி.த.செல்லப்பாண்டியனுடன் இணக்கமாக இணந்து கட்சிப்பணியாற்றி சீனியர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்கப்பட்டது என்று தூத்துக்குடி அதிமுகவினர்கள் மத்தில் கோஷ்டி மோதல் வெடித்து வந்தது.
தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா? சாவா? என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் செல்வாக்குமிக்க தொண்டர்களுடன் நெருக்கமாக இருக்கும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டினுக்கு தூத்துக்குடி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடைய எழுந்து வந்தது. ஆனால், தொண்டர்களின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக தூத்துக்குடி தொகுதியை அதிமுக கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்குங்கள் செல்லப்பாண்டியனுக்கு வழங்க கூடாது என அதிமுக தலைமைக்கு இரண்டு முக்கிய பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்ததாக பேசப்படுகிறது.
இந்தநிலையில் அதிமுக தலைமை தூத்துக்குடி அதிமுக கோஷ்டி மோதலின் உச்சக்கட்டத்தை உணர்ந்து கூட்டணிக்கட்சிக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கியது.
அதிமுக கூட்டணிக்கட்சியினர் அனைவரையும் எப்படி சந்திப்பது, அவர்களை வைத்து தேர்தல் வியூகம் எவ்வாறு அமைப்பது என வேட்பாளர் விஜயசீலன் முதலில் குழப்பத்தில் இருந்தாராம். அதன் பிறகு, அவர் எடுத்த தெளிவான முடிவு நேரடியாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை நேரடியாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் சி.த.செல்லப்பாண்டியனின் ஆலோசனையின் பேரில் தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டார் எஸ்.டி.ஆர்.விஜயசீலன்.
சி.த.செல்லப்பாண்டியனின் தலைமையில் பெரும் படையாக அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியதால், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் புதிய திருப்பம் ஏற்பட துவங்கியுள்ளது.
தூத்துக்குடி அதிமுக உட்கட்சி பூசலாலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட தொய்வினாலும், திமுக எளிதாக வெல்லும் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அதிமுகவில் நிர்வாக பொறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நமது கூட்டணிக் கட்சி தூத்துக்குடியில் ஜெயிக்க வேண்டும், நமது அதிமுக கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நாம் தேர்தல் வரும் வரை இரவு பகல் பாராமல் கண்விழித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என சி.த.செல்லப்பாண்டியன் தொண்டர்கள் படை சூழ தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாஷிங்மிசின், இலவச கேபிள், 8 இலவச கேஸ் சிலிண்டர், கல்விகடன் ரத்து போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை துண்டு பிரச்சாரமாக செல்லப்பாண்டியனின் தலைமையில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திடீர் திருப்பமாக அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் பிரச்சாரம் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருவதை கண்ட திமுகவினர் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் விஜயசீலனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிரமாக களமிங்கிய பிறகு தொகுதி நிலவரம் அதிமுகவிற்கு சாதகமாக மாற துவங்கி விட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவினர்கள் தேர்தல் பிரசாரத்தில் தற்போது காட்டும் வேகத்தை ஏப்ரல் 4ம் தேதி மாலை வரை சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் விரைவுப்படுத்தினால், அதிமுக கூட்டணிக்கட்சி அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மொத்தத்தில் தூத்துக்குடி தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக இடையே நேரடி போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.


