தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 20 மாவட்டங்களில் வெயில் தகிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
பருவமழை காலம் முடிந்த நாளில் இருந்தே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இன்று மாா்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று கூறியுள்ளார்.
சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதியை நோக்கி ஏப்ரல் 2 ஆம் தேதி முதல், தரைக்காற்று வீச சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்காரணமாக, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 டிகிரியில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதுபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை உயரும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 31ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல, தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளுக்கும் மீனவா்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் காலை முதலே பல நகரில் வெயில் தகித்து வருகிறது. சென்னை தொடங்கி குமரி வரைக்கும் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் தென்காசி மாவட்டத்திலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன. காலை நேரத்தில் வெப்பம் தகித்த நிலையில் இரவு நேரத்தில் பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


