ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் மாவட்ட அளவில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிக்கும் குழு அனுமதி பெற்று மட்டுமே தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ் வெளியிட்ட குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலைமுன்னிட்டு கேபிள்டிவி, தொலைக்காட்சி சேனல்கள் மற்றம் சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது தொடர்பாக சான்றிதழ் பெறும் பொருட்டு மாவட்ட அளவில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிக்கும் குழு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விளம்பரம் வெளியிடுதல் தொடர்பான வழிமுறைகள்
தொலைக்காட்சி சேனல்கள் , கேபிள்டிவி சேனல்கள் , ரேடியோ, தனியார் எப்.எம் சேனல்கள், திரையரங்குகள், இ-பேப்பர்கள், பொது இடங்களில் திரையிடப்படும் ஒளி-ஒலி காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவை அனைத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடவோ, ஒளிபரப்பவோ விரும்பும் அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் மேற்கண்ட குழுவின் மூலம் முன்கூட்டியே சான்றளிக்கப்பட்ட பின்னரே அவற்றை வெளியிட வேண்டும்.
தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக கட்சிகளால் மக்களுக்கு அனுப்பபடும் Bulk SMS – Voice Messages ஆகியவை அனைத்தும் இக்குழுவின் மூலம் முன்கூட்டியே சான்றளிக்கப்பட்ட பின்னரே அனுப்பபட வேண்டும்.
செய்திதாள்கள் மின்னணு வடிவிலான இ- பேப்பர்களில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான பிரச்சார விளம்பரங்கள் அனைத்தும் இக்குழுவின் மூலம் முன்கூட்டியே சான்றளிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்பட வேண்டும்.
எதிர்வரும் 05.04.2021 மற்றும் 06.04.2021 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் எந்த ஒரு பத்திரிக்கைகளிலும் தேர்தல் விளம்பரம் செய்யப்பட வேண்டுமாயின் இக்குழுவினரின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.
வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலமாக செய்யும் விளம்பரங்கள் அனைத்தும்,மேற்படி குழுவினரால் அனுமதி பெறப்பட்டுள்ளதா என கண்காணிக்கப்படும்.
மேற்படி ஊடகம் சான்றிதழ் கண்காணிக்கும் குழுவினரிடம் அனுமதி பெற வேண்டுமாயின்,பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்கு உத்தேசித்துள்ள தினத்திலிருந்து மூன்று தினங்களுக்கு முன்பாகவும், பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இதர வேட்பாளர்கள் 7 தினங்களுக்கு முன்பாகவும் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் விண்ணப்பம் செய்து கொண்ட நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் விண்ணப்பத்தின் பேரில் அனுமதி வழங்கப்படும்.
தங்களது விண்ணப்பத்துடன் கீழ்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
1. விளம்பரம் செய்யப்பட உள்ள விளம்பர படத்தின் மின்னணு வடிவிலான தமிழாக்கம் செய்யப்பட்ட இரண்டு நகல்கள்
2. விளம்பரம் தயார் செய்வதற்கு ஏற்பட்ட தொகை விவரம்.
3. தொலைக்காட்சி சேனல் மற்றும் கேபிள் ஒளிபரப்பு ஆகியவற்றில் விளம்பரம் செய்வதற்கான நேரம் மற்றும் கட்டணம்.
4. இந்த விளம்பரத்தின் மூலம் வேட்பாளர் மற்றும் அவரது கட்சிக்கு கிடைக்கப் பெறும் வாய்ப்புகள் (Prospects) குறித்த வாக்குமூலம்
5. விளம்பர தயாரிப்பு நிறுவனத்திற்கு செலுத்தப்படும் கட்டணமானது காசோலையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ மட்டுமே செலுத்தப்படும் என்பதற்கான வாக்குமூலம்.
தொலைக்காட்சி/கேபிள்டிவி மூலமாக வேட்பாளர்களின் அனுமதி பெறாமல் செய்யப்படும் விளம்பரங்கள் இக்குழுவினருக்கு தெரியவரும் பட்சத்தில்,மேற்படி ஒளிபரப்பு நிறுவனங்களின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 (ர்)ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்தல் தொடர்பாக விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில், அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அச்சடிக்கப்படாதது குறித்து இக்குழுவினரின் கவனத்திற்கு வருமாயின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 127ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேட்பாளர்கள் தொலைக்காட்சி வாயிலாக அனுமதியின்றி செய்யப்படும் விளம்பரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அனுமதியின்றி தங்களது சொந்த செலவில் வாக்காளர்களை கவரும் வகையில் வெளியிடும் செய்திகள் குறித்து சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக விளக்கம் கோரி அறிவிப்பு அனுப்பப்படும். 48 மணிநேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லையெனில், சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக ஊடகங்கள் மூலமாக வரப்பெறும் புகார்களையும் இக்குழுவானது விசாரணை மேற்கொண்டு,மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரம் உள்ளது.
இக்குழுவின் உத்திரவானது திருப்திகரமாக இல்லையெனில்,மாநில அளவில் உள்ள ஊடகச்சான்று மற்றும் கண்காணிக்கும் குழுவிடம் (State Level Media Certification and Monitoring Committee)) மேல் முறையீடு செய்து கொள்ள வழிவகை உள்ளது என தகவலை மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

