தூத்துக்குடி குருஸ்பர்னாந்த் சிலை அருகில் திமுக வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ‘’தூத்துக்குடி தொகுதியில் எந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அருமை தங்கை கீதாஜிவனிடம் கேட்டேன். அவர் குரூஸ்பர்னாந்த் சிலை அருகில் என்றார். இதை கேட்டவுடன் நான் திகைத்துப்போனேன், அதிர்ந்துபோனேன்.
ஏன் என்றால், கடந்த 1996ம் ஆண்டு இதே இடத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து குறித்த உண்ணாவிரத போராட்டம் நடத்தினேன். இந்த இடத்தில் மூன்று முறை போராட்டம் நடத்தியிருக்கிறேன். நடைபயணம் நடத்தியுள்ளேன். அதைத் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி ஆலையை மூடுவதற்கு உயர்நீதி மன்றத்தில் உத்தர பெற்றேன். ஆனால் உச்சநீதி மன்றம் அந்த தீர்ப்பிற்கு தடை விதித்தது. மீண்டும் அந்த ஆலையை திறக்க உச்சநீதிமன்ற அனுமதித்தது.
அதன் தொடர்ச்சியாக 2018 ம் ஆண்டு பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றபோது,அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 13 பேர் கொல்லபட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். அவர்களின் அந்த ரத்தபழிக்கு இந்த தேர்தலில் நாம் பழிவாங்க வேண்டாமா? தமிழகத்தில் ஊழல் மலிந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைதுறை டெண்டரில் முதலமைச்சரே 6 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் கவர்னரிடம் மனுவாக கொடுத்துள்ளார். இந்த ஊழல் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.
இன்னும் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இது தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிடும் ஊடகங்களை அரசு மிரட்டி வருகிறது. அவர்கள் இன்னும் சில நாட்களில் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள். தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. ரூ.5.76 லட்சம் கோடி கடன் உள்ளது. எனவே எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். என் உயிர் இருக்கும் வரை தமிழகத்துக்காக பாடுபடுவேன்’’ என்றார் உருக்கமாக.
கூட்டத்தில் திமுக, காங்கிரஸ்,மதிமுக,இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

