கரூர், செப், 3
கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3 நாட்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள சாலப்பாளையம் ஜெயந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் விசுவநாதபுரியைச் சேர்ந்த அபிமன்யு என்பவரிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று அசலுக்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் அதிகமாக செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், மேலும் வட்டி தொகை கேட்டு, கந்தசாமியை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தண்ணீர் பந்தல் பாளையத்தில் கட்டி வைத்து, பணம் செலுத்தினால் தான் விடுவிக்க முடியும் என்று அபிமன்யு மற்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கந்தசாமியை மீட்பதற்காக அவரது மகள் கலைவாணி (வயது 23) தண்ணீர் பந்தல் பாளையத்திற்கு சென்று, அபிமன்யு மற்றும் அவரது நண்பர்களிடம் அடுத்த நாள் வட்டி தொகையை கொடுத்துவிடுவதாக கூறி மன்னிப்பு கேட்டு தந்தை கந்தசாமியை மீட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை கந்தசாமியின் வீட்டுக்கு வந்த அபிமன்யு மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் கலைவாணியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அன்று காலை கலைவாணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கலைவாணிக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுத் தொடர்பாக க. பரமத்தி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27-ஆம் தேதி க. பரமத்தி காவல் நிலையத்தில் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கந்தசாமி புகாரளித்தார். தொடர்ந்து, க. பரமத்தி காவல்துறையினர் BNS 296, 108, பெண்கள் மீதான பாலியல் புகார் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

இளம்பெண் மரணம் தொடர்பாக க.பரமத்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 28) கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலை முதல் ஏ.டி.எஸ்.பி. பிரபாகர், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜராஜன், க.பரமத்தி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், கந்துவட்டி கும்பலை கைது செய்யக்கோரி கந்தசாமி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இருந்தபோதும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர்தான் உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கந்துவட்டி கும்பல் ஆதிக்கசாதியினர் மற்றும் அதிகார பின்புலத்தில் இருப்பதன் மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கொள்ள முயற்சிப்பதாக மாவட்ட சமூக நீதித்துறை நலக்குழு உறுப்பினரும், பட்டியலின விடுதலைப் பேரவை தலைவருமான ஆனந்தராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் கைது நடவடிக்கையில் கால தாமதம் ஆகும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.
செய்தி தொகுப்பு
K. காமேஸ்வரன் கரூர்
