புதுச்சேரியில் பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ‛உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி’ என்ற தலைப்பில் 50 ஆயிரம் பேரிடம் கருத்துகள்கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உளளது. 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
விண்ணப்பித்த 15 நாட்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு
புதுச்சேரியில் பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம்
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம், கல்வி தேர்வாணையம் அமைக்கப்படும்
எந்த ஆன்மிக வழிபாட்டு தலங்களும் அரசால் நிர்வகிக்கப்படாது.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பின்னர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், புதுச்சேரியில் 51 சதவீதம் பெண்கள் உள்ளனர். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு , அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பா.ஜ., அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

