பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!
வேடநத்தம் மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த அந்த மாணவி, நேற்று மாலை மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் விடப்பட்ட பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:”தமிழகத்தில் தொடரும் இதுபோன்ற கொடூரச் செயல்கள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை மாவட்டக் காவல்துறை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாவட்டக் குழு சார்பாக மாவட்டத் தலைவர் மாடசாமி வலியுறுத்தியுள்ளார்.
