தூத்துக்குடி, பிப், 11
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்திலுள்ள குருமகாலிங்கேஸ்வரர்–நந்திபகவானுக்கு வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஹா சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழா “சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர்” தலைமையில் நான்குகால சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு மஹாகணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நவக்கிரக பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு முதல்கால வழிபாடு, அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேதி பாராயணம், தமிழ்மறை தேவாரம்–திருவாசக பாராயணம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
இவ்விழாவில் மலேசியா கடாரம் டத்தோ செந்திநாதன் பங்கேற்கிறார். ஆன்மிக குழுவினரின் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. “ஓம் நமச்சிவாயா” எழுதும் பக்தர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு மஹா சிவராத்திரி விழா நிறைவடைகிறது. இவ்விழாவில் ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு “சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர்” கேட்டுக் கொண்டுள்ளார்.

