தூத்துக்குடி
பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலுக்கு முந்தைய நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். பெண்களுக்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் காணும் பொங்கல்.
பொதுவாக காணும் பொங்கல் பண்டிகையானது கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளை மற்றும் சுற்றுலாத்தளங்களை சார்ந்தும் இருக்கிறது. காணும் பொங்கல் அன்று வீட்டில் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காணும் பொங்கல் என்றாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு அவரவர்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவது வாடிக்கையாகும்.
காணும் பொங்கலை முன்னிட்டு தென்மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களிலும், தாமிரபரணி கரையோரங்களிலும், பூங்காக்களிலும், கடற்கரையிலும் பொதுமக்கள் திரண்டு உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடியை பொருத்தவரையில், வடக்கு கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் கடற்கரை, முயல்தீவு கடற்கரை, புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா ஆகிய கடற்கரை பகுதிகளிலும் அதிகளவு பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடி நகரின் பிரதான பூங்காவான ராஜாஜி பூங்கா மற்றும் மாநகரில் உள்ள நேரு பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, விவிடி பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா, தனசேகரன் நகர், மில்லர்புரம், போல்டன்புரம், கால்டுவெல்காலனி உள்பட மாநகராட்சி பகுதியில் சுமார் 53 பூங்காக்கள் செயல்பாட்டில் உள்ளன. கடற்கரைசாலையில் உள்ள படகு குழாம் உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் பொதுமக்கள் மாவட்ட அளவில் இருந்தும் மாநகர பகுதியில் இருந்தும் அதிகளவு கூடுவது வழக்கம். தங்களது மகிழ்ச்சியை கொண்டாடுவது மட்டுமின்றி பள்ளி, கல்லூரி நண்பர்கள் சந்திப்பும் கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அமையும்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காணும் பொங்கலை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கூறுகையில்: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள 60 வார்டு பகுதிகளிலும் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான பூங்காக்களும், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைந்துள்ள பூங்காக்கள் உள்பட பல தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய பூங்காக்களும் அமைந்துள்ளன. இவை அனைத்தையும் நல்லமுறையில் பராமரித்து பொதுமக்கள் வந்து செல்லும் வகையில், மின்விளக்குகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பணிகளையும் முழுமையாக செய்துள்ளோம். இதை தவிர்த்து மாசு இல்லாத வகையில், அனைத்து பூங்காக்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் குப்பைகளை போடுவதற்கு அதற்கென தனியாக குப்பை தொட்டிகளை வைத்துள்ளோம். அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். நமது மாநகராட்சி தூய்மையான மாநகராட்சி என்ற இலக்கை கடைபிடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எல்லா பூங்காக்களிலும் மாநகராட்சி பணியாளர்களும், பாதுகாவலர்களும் இருந்து பணியாற்றுவார்கள் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு, பூங்காக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு இப்பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
இளநிலை பொறியாளர் லெனின், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் கந்தசாமி, மின்வாரிய தொழிற்சங்கத்தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.

