ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – எதிரியை கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து, மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் தலைமையில் தலைமைக்காவலர்கள் திரு. ராஜ்குமார், திரு. இசக்கியப்பன், திரு. சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (24.03.2021) ரோந்து மேற்கொண்டபோது ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராஜேஷ் (25) மற்றும் மணத்தி குட்டி தோட்டம் தெற்கு தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் சரவணக்குமார் (30) ஆகிய இருவரும் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு பழைய வீட்டில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் அந்த பழைய வீட்டை சோதனை செய்ததில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் இருவரையும் கைது செய்து ரூபாய் 5,00,000/- மதிப்புள்ள 500 கிலோ புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

