தூத்துக்குடி.
கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத்தலைவர் அன்னலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது குறைகளை பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் 4 மண்டலம் வாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவ மழை 3 நாட்களாக பெய்த நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் 58 வார்டுகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் ரெகுலராக இருந்து வருகிறது. 2, 16, 17 ஆகிய வார்டுகளில் மட்டும் 3 இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதிலும் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. 16, 17, 18 ஆகிய 3 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளும், சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்றதால் மழைநீர் தேங்கியது. அதையும் முறைப்படுத்தி அப்புறப்படுத்தி உள்ளோம். இந்த பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மழை காலம் முடிந்ததும் ஜனவரிக்குப் பின் சாலை அமைக்கும் பணியும், பாதாள சாக்கடை பணியும் நிறைவுபெறும். மாநகரில் உள்ள ராஜாஜி பூங்கா, எம்ஜிஆர் பூங்கா உள்பட பல விளையாட்டு திடல், பூங்கா உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் பல கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும். இரண்டு மாதம் மழை காலமாக இருப்பதால் பக்கிள் ஓடையில் 500 மீட்டர் தூரத்திற்கு தூய்மைப் பணியை மேற்கொண்டுள்ளோம். எப்சிஐ குடோன் பகுதியிலிருந்து பக்கிள் ஓடை விரிவாக்கம் செய்யும் பணியும் 7 கி.மீ தூரம் நடைபெற உள்ளது. போக்குவரத்துக்கு தகுந்தாற்போல் புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசலையும் குறைத்துள்ளோம். பல்வேறு கட்டமைப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். 16, 17 வார்டு பகுதிகளில் உள்ள காலி மனைதாரர்கள் 453 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் 170 பேர் தங்களது நிலத்தை சரிசெய்துள்ளனர். மற்ற இடங்களில் உள்ள மரம், செடி, கொடிகளை மாநகராட்சி அப்புறப்படுத்தி வருகிறது. மாநகர பகுதியில் புதிய குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில் அதற்கு தேவையான புதிய மின் விளக்குகளும் அமைத்து வருகிறோம். மீளவிட்டான் பகுதியாக இருந்து மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட 15, 16, 17, 18 ஆகிய வார்டுகள் அதிமுக ஆட்சியில் முறையான பணிகள் நடைபெறாத நிலை இருந்தது. தற்போது 80 சதவீதம் அடிப்படை வசதிகள் நிறைவேற்றியுள்ளோம். மழை நீர் தேங்கும் பகுதிகளான கோக்கூர் குளம், புலிப்பாஞ்சான் குளம், ஆதிபராசக்திநகர் பகுதிகளில் மின்மோட்டார் மூலம் தேங்கும் நீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த மண்டலத்தில் கடந்த ஆண்டு 10.07.2024 முதல் 15.10.2025 வரை பொதுமக்கள் கொடுத்த 901 மனுக்களில் 897 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 4 மனுக்கள் பிளான் அப்ரூட் வகையில் ஆய்வில் உள்ளது. வடகிழக்கு பருவ மழையையொட்டி பொதுமக்கள் எந்தவகையிலும் பாதிக்காத வகையில் சுகாதார துறை அலுவலர்களும், பணியாளர்களும் தொற்று நோய் எதுவும் பராவாத வகையில் அப்பணியை மாநகராட்சி பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர். குறைகளை கேட்பது பெரிதல்ல அதை நிறைவேற்றி கொடுப்பது தான் மக்கள் பணி. அதை தான் நாங்கள் செய்து வருகிறோம், என்று பேசினார்.
முகாமில், நகரமைப்பு திட்ட பொறியாளர் வேலாயுதம், உதவி பொறியாளர் காந்திமதி, பொறியாளர் தமிழ்செல்வன், மாநகராட்சி சுகாதார நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, இளநிலை பொறியாளர் லெனின், உதவி பொறியாளர்கள் பாலச்சந்திரன், இராகவி, குழாய் ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சாம்ராஜ், பகுதி செயலாளர் ரவீந்தீரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ராமர், கனகராஜ், கந்தசாமி, மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், பகுதி சபா உறுப்பினர் செல்வராஜ், போல்பேட்டை பகுதி தி.மு.க பிரதிநிதி ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் 15 வார்டுகளை சேர்ந்த பொதுக்கள் தங்கள் பகுதி குறைகளை மனுக்களாக வழங்கினார்கள். பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களுடன் குறைகளை முழுமையாக கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.

