தூத்துக்குடி ஜூலை, 29
கள்ளர் பெயரில் உள்ள பள்ளி மற்றும் விடுதிகளை தமிழக அரசு பெயர் மாற்றக் கூடாது என்று பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் தலைவர் இசக்கிராஜா அளித்த மனு: கள்ளர் அரசு பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயரை மாற்றி அரசானை வெளியிட்டு அதனை அமல்படுத்துவது கள்ளர் சமூக மக்களிடையே மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளர் அரசு பள்ளிகள் கள்ளர் சமூக மக்களின் வாழ்வியலை உயர்த்துவதற்காக 1920ல் அப்போதைய ஆங்கிலேய அரசால் கள்ளர் சமூக மக்ககளிடம் கள்ளர் பொதுநல நிதி என வசூல் செய்யப்பட்டு அப்போதைய கள்ளர் சீரமைப்பு துறையால் உருவாக்கப்பட்டவை. அதனை தமிழக அரசு பெயர் மாற்றி அரசானை வெளியிடுவதற்கு எந்த வித உரிமையும் கிடையாது.
மேலும் கள்ளர் அரசு பள்ளிகள் மற்றும் விடுதிகளினால் அனைத்து சமூகத்தை சேர்ந்த பொது மக்களும் பயன் பெறுகின்றனர். கள்ளர் என்கிற பெயர் தாங்கிய காரணத்தால் எந்தவித சமூக பிரச்சனைகளோ மாணவர்களுக்கு இடையூறுகளோ இதுவரை ஏற்பட்டதில்லை. இது சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழகத்தின் பூர்வ பழங்குடியின மக்களின் அடையாளத்தை மறைத்து வரலாறை அழிக்கும் செயலாகவே மக்களிடையே பார்க்கப்படுகிறது.
ஆகவே மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அரசின் இந்த பெயர் மாற்ற முடிவை உடனடியாக கைவிட்டு கள்ளர் அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் அதே பெயரில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு தமிழக பூர்வ பழங்குடியின மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

