தமிழக அரசியலில் சுமார் 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்துவரும் சின்னம்மா சசிகலாவின் விசுவாசிகள் இணைந்து தியாகத்தாய் சின்னம்மா பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமித்து மாபெரும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மாநில தலைவராக சு.ப.தர்மலிங்கம் இருந்து வருகிறார்.
சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய போது, தொடர்ந்து 21 மணி நேரம் வழிநெடுக உற்சாக வரவேற்று அளித்த சம்பவம் நாடறிந்தது. சசிகலா திடீரென அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சசிகலாவின் தீவிர ஆதவாளர்கள் பலர் அவரது வீட்டின் முன் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். சசிகலா தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போராட்டங்கள் தொடர்ந்தால், சசிகலாவின் வேண்டுகோளை ஏற்று இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேமுதிக, எஸ்.டி.பி.ஐ கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இக்கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அமமுக அமைத்துள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கு தியாகத்தாய் சின்னம்மா பேரவை தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. பேரவையின் தலைவர் சு.ப.தர்மலிங்கம், பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் பி.ஆர்.எஸ்.சக்திவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜான்சன் மோகன், மாநில அமைப்புச்செயலாளர் பஞ்சட்ராம்;, மாநில தலைமைநிலையச் செயலாளர் காஞ்சி லயன் டாக்டர் கே.முத்து ஆகியோர் இணைந்து நடைபெறவுள்ள தேர்தலில் அமமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் நிர்வாகிகள் 234 தொகுதிகளில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேமுதிக, எஸ்.டி.பி.ஐ கட்சி-க்கு முழுஆதரவை தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள வடமலை பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ந. முத்துராமலிங்கம், நகர செயலாளர் கந்தன் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி, நாசரேத் நகர செயலாளர் உலககுமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாக்கிய விநாயகம், இளைஞரணி செயலாளர் எஸ்.சரவணன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் ந.முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் வடமலை பாண்டியனுக்கு பொன்னாடை போர்த்தி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
திருச்செந்தூர் தொகுதியில் அமமுக கூட்டணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தியாகத்தாய் சின்னம்மா பேரவையினர் ஆதரவு அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். வெற்றிக்கனியை ருசிக்க இந்தமுறை அமமுகவிற்கே வாய்ப்பு அதிகம் என்பதே களநிலவரம்.
சிறப்பு செய்தியாளர்: நெல்லை அமல்ராஜ்



