தூத்துக்குடி, பிப்.14-
தூத்துக்குடியில் பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி ஒப்பந்தக்காரரை தாக்க முயற்சி செய்த 5 நபர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, பால விநாயகர் கோயில் தெரு, ஆவுடையார்புரத்தில் மைக்கேல் அருள் ரீகன் மற்றும் அவர்களது சகோதரர்களுக்கு பாத்தியப்பட்ட இடத்தில், கல் தூண்கள் ஊன்றி கம்பி வேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஒப்பந்தக்காரர் கணேசமூர்த்தி என்பவர் மைக்கேல் அருள் ரீகனுக்கு பாத்தியப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்து தரும் வேலையை கடந்த நான்கு மாதமாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மேற்படி இடத்தில் கணேசமூர்த்தி தனது பணியாட்களுடன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அந்த இடத்திற்கு அருகில் வசித்து வரும் சாந்தி, அன்பு, விஜி, அகஸ்டா, ஆண்டாள் ஆகிய 5 பேர், மைக்கேல் அருள் ரீகன் மற்றும் அவரது சகோதரர்களுடன் பிரச்னை செய்து, வேலி அமைக்க கூடாது என்று, தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்த, ஒப்பந்தக்காரர் கணேசமூர்த்தியை, 5 பேர் அவதூறான வார்த்தைகளால் பேசி, கல் தூண்களை உடைத்து சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.
புகாரினை பதிவு செய்து கொண்ட தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார், விசாரணை செய்து சம்பவ இடத்திற்கு அருகில், உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் 173 பிரிவின் கீழ், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்ற செயலில் ஈடுபட்ட நபர்;களை தேடி வருகின்றனர்.

