தூத்துக்குடி.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொருளாளராக பணியாற்றிய காலத்தில் திரைப்படத் துறை மட்டுமின்றி திமுகவிற்கு வலுசேர்க்கும் வகையில் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடின் காரணமாக வெளியேறி 1972ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றிப் பெற்றதின் மூலம் இந்தியாவே திரும்பி பார்க்கும் நிலை உருவானது.
அதன்பின் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொடர் வெற்றியின் மூலம் அவர் மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றியது மட்டுமின்றி, யாரை எங்கே வைத்து அழகு பார்க்க வேண்டும், என்ற திட்டத்தோடு ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளராக்கி அரசியல் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் மின்னி பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட சில சம்பவத்தின் மூலம் நடைபெற்ற ஒரு பொதுத்தேர்தலில் சேவல், புறா என இரண்டு பறந்து வந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்பு உதயசூரியன் உதித்தது.


அதன்பின் ஒவ்வொரு கால மாற்ற சூழ்நிலைக்கேற்ப அரசியலில் ஜெயலலிதா பொதுச்செயலாளராகி அவர் சந்தித்த தேர்தல் வெற்றித் தோல்வி என இரண்டையும் கலந்து 10 ஆண்டுகளாக அவரும் மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றி அதிரடி நடவடிக்கையின் மூலம் அதிமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வந்தார். ஆட்சியில் இருந்த போது மறைவை சந்தித்த காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக பணியாற்றினார்.
அப்போது, ஏற்பட்ட சில சம்பவத்தின் மூலம் அதிமுக என்ற கட்சியிலிருந்து கருத்து வேறுபாடுகள் தோன்றி ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா என மூன்று பேரும் தனி அணிகளாக செயல்படும் நிலை உருவாகியது.
அதன்பின் அதிமுக சந்தித்த சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக வரும் நிலைக்கு அதிமுக நிலை மாறியது. உள்ளாட்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். தூத்துக்குடி உள்பட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது

இதைச் சுட்டிக்காட்டி அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்கள் எடப்பாடியின் நடவடிக்கை சரியில்லாத காரணம் தான் தோல்வியை சந்தித்தது, என்று வசைபாடி வந்த நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்து 9 வழக்குகளில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு வரப்பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் பிஜேபி-யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், தேவையில்லை என்று மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்த நிலையில் பிஜேபி-யுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை எடப்பாடி வெளியிட்ட பின்பு கடந்த 15ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 2026ல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு எடப்பாடிக்கு முழு அதிகாரம் வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தகுமார், கோல்டன் ஆகிய இருவரும் தமிழக வெற்றிக்கழக மண்டல பொறுப்பாளர் சசி-யின் தொடர்பு மூலம் சென்னையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து கூறுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது. அது எங்களுக்கு மிகப்பெரிய வேதனையை தந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து ஜீரணிக்க முடியவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்து அந்த கட்சியில் இணைந்தோம், என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில்: அதிமுக என்ற ஆலமரத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதில் பல விழுதுகள் ஜெயலலிதா வழியில் வளர்ந்தன. அந்த வரிசையில் 3ம் தலைமுறையாக அதிமுகவை வழிநடத்தி 4 ஆண்டு காலம் தமிழகத்தில் நல்லாட்சிக் கொடுத்தவர் எடப்பாடியார். ஏதோ ஒருசிலர் செய்த குரோத விரோத செயல்களால், அதிமுக அழிந்து விட்டதாக கூறுவது தவறு. இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக அதிமுக தான் இருக்கிறது. 2 கோடியே 16 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக தற்போது அதிமுக இருந்து வருகிறது. இதற்கு எதிர்காலம் இல்லை என்று கூறுபவர்களுக்கு 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது எடப்பாடியார் அமைக்கும் வியூகம் அதிமுகவிற்கு வெற்றியைத் தரும், என்று கூறினார்.

