தூத்துக்குடி, டிச. 4:
தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் இங்குள்ள அலுவலகங்களில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடந்த நேரத்தில் அலுவலக பொறுப்பில் இருந்த தூத்துக்குடி கீழூர் சார் பதிவாளர் ஆரோக்கியராஜ் (54), அலுவலக உதவியாளர் முத்துமணி (59), தனியார் பத்திர எழுத்தாளர் மாரியப்பன் (48), பத்திர எழுத்தர் அலுவலக ஊழியர் ஜோசப் செல்வராஜ்(45) ஆகிய 4 பேர் பேர் மீது வழக்கு பதிவு. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது .
தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அதிரடி சோதனை வரவேற்கத்தக்கது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இங்கு நடைபெறும் முறைகேடுகளையும்
புரோக்கர்களின் அட்டூழியங்களையும் முழுமையாக ஒழிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது…

