தூத்துக்குடி, ஆக்,17
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்னர். 132 கிலோ புகையிலை பொருட்கள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துகளை முழுமையாக ஒழிக்க தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் வழிகாட்டுதலின் பேரில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார், சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கணேஷ் புகையிலை பாக்கெட்டை கையில் வைத்திருந்த சிறுவனை அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் பெங்களுரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த பூபால்ராயர்புரம் 5வது தெரு செபஸ்தியன் மகன் ராஜா (42), தாளமுத்துநகர், சமீர்வியாஸ் நகர் மரிய இன்னாசி மகன் சுரேஷ் (40), பூபால்ராயர்புரம் 4வது தெரு பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (26), கோவில்பிள்ளை விளை ஜான் ஜேசுவா எபனேசர் (32), ஆரோக்கியபுரம் ஐயர்விளை பால்துரை மகன் சுந்தர்ராஜ் (42) ஆகிய 5பேரை போலீசார் கைதுசெய்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா , போன்ற போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக திகழ்வதற்காக இது போன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும்,மேலும் பள்ளிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவு பாதுகாப்புதுறையினருடன் இணைந்து காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
சிறப்பாக பணியாற்றிய வடபாகம் போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

