தூத்துக்குடி, ஜூலை,21
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 442ஆம் ஆண்டு திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக.5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இது தொடர்பாக ஆலய அதிபர் ஸ்டார்வின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக வருகிற 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருச்சிலுவை சிற்றலாயத்தில் இருந்து மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் கொடி பவனி நடக்கிறது. தொடர்ந்து 26ஆம் தேதி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. காலை 7 மணிக்கு மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது.
பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. 5-ஆம் நாள் விழாவான வருகிற 28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.
ஆகஸ்டு 4-ஆம் தேதி 10-ம் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். ஆக.5-ஆம் தேதி அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசீர் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில் இயக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெளி நாடுகள், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் தங்குவற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னையின் திருவிழாவில அனைவரும் பங்குபெற அன்புடன் அழைக்கின்றோம் என்றார். பேட்டியின் போது, பனிமய அன்னைப் பேராலயப் உதவி பங்குத்தந்தை பாலன், பணிக்குழு துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், துணைச் செயலாளர் பெனாட், பொருளாளர் ஜோசப் சோரிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

