தூத்துக்குடி, மார்ச், 24
தூத்துக்குடி பாராளுமன்ற
தொகுதியில் எம்பியாக இருந்த கனிமொழி எந்த பணியுமே செய்யவில்லை” என்று அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவசாமி வேலுமணி சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார் அவருக்கு அதிமுக வினர் மிக பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய சிவசாமி வேலுமணி “தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் எம்பி ஆக இருந்த கனிமொழி தூத்துக்குடி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு விளம்பரம் தேடி உள்ளார். நான் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் விவசாயிகள், உப்பள தொழிலாளர்கள், பனை தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை உயர பாடுபடுவேன்.
மேலும் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிப்பை எடுப்பேன். ஆண்டுதோறும் தூத்துக்குடி மாநகர மக்கள் வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பேன். என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க செய்து 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
மேலும் அவர் கூறுகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக டெபாசிட் இழக்கும் என்ற கேள்விக்கு அவர் பதில் கூறும் போது “திமுகவிலேயே இருந்தவர் கிடையாது, அதிமுகவில் அம்மாவின் ஆட்சியில் குறுநில மன்னர் போல் இருந்து கொண்டு அம்மாவிடம் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு திமுகவிற்கு சென்றவர் அனிதா. இவ்வாறு கூறுவது அவர் உண்ணும் உணவிற்கே துரோகம் செய்வதாகும் என அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
முன்னதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் , மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதுபோல் கூட்டணி கட்சியினர் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அஷரப் அலி, காதர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

