எல்லோரையும் மிரட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க முயற்சி செய்கிறது: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
தூத்துக்குடி
தமிழ்நாட்டில் ஏப்ரல்19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் இந்தியா கூட்டணி முழு வீச்சியில் ஈடுபட்டு வருகிறது.
தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தேர்தல் சார்பில் தலைமை தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது. எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே உள்ள காரியாலத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி திறந்து வைத்தார்.
பின்னர், தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுவாகவே பாஜக தன் மீது விமர்சனங்களை வைக்கக்கூடிய தன்னை எதிர்க்க கூடிய தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பொய் செய்தியை கட்டம் கட்டி அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது.
டெல்லி ஆம் ஆத்மி கட்சியை எடுத்துக் கொண்டால் முதலில் துணை முதலமைச்சரை கைது செய்தார்கள். தற்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்திருக்கக் கூடிய இன்னொரு நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து அரசியல் தலைவர்களை கைது செய்வது அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது அமலாக்கத்துறை ரெய்டு பயன்படுத்துவது காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்களின் பணத்தை முடக்குவது இப்படி எல்லாரையும் விரட்டியே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தவறான கருத்தை முன் வைக்கின்றனர்… இதனை மக்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள்.
மேலும், பொதுவாகவே பாஜகவில் பயந்து தான் இருக்கின்றன. அதான் யார் என்ன கருத்து சொன்னாலும் ஜெயிலில் வைக்க முற்படுகின்றனர். ஜனநாயகத்தை அவர்கள் நம்பவில்லை. மக்களை பயத்தில் வைத்துக் கொண்டு மக்களை மிரட்டி அரசியல் தலைவர்களை மிரட்டி அவர்கள் ஆட்சியில் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக்கூடியவர்கள் சிந்திக்க கூடியவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேலும், வரும் 26 ஆம் தேதி மாலை சிந்தலக்கரையில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
மேலும் வருகிற, 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தான் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். முன்னதாக, தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்கிறோம். அங்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அன்று மாலை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்நலக்கரையில் நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் என்னை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார் என தெரிவித்தார்.
இதில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், மேயர் ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.

