தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 9 பறக்கும் படையினர், 9 நிலையான கண்காணிப்பு குழுவினர், 12 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
அதன்படி முறையான ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் கொண்டு சென்றால,் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணம் இன்றி பணம் எடுத்து வந்த 25 பேரிடம் மொத்தம் ரூ.91 லட்சத்து 63 ஆயிரத்து 670 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள வேட்டி, தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

