தூத்துக்குடி
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டினார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் தூத்துக்குடியில் மாவட்டத்தை சார்ந்த பாரா விளையாட்டு சங்கம் சார்பாக சப் ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்று பதக்கங்களை வென்றனர். இவர்களில் சிலர் தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டி டெல்லியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இந்நிலையில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க துணை தலைவர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், செயலாளர் ஸ்டீபன், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, ஈசி மெம்பர் அஜிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

