தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருந்து தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு ஒருசிலர் திரும்பியுள்ள நிலையிலும் இன்னும் முற்றிலுமாக பழைய நிலைக்கு திரும்ப முடியாமலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பலர் இருந்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தால், ஆடு, மாடுகள் உயிரிழப்பு, பைக், கார்கள் சேதம், சிறு குறு வியாபாரிகளின் பொருள் இழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மழைவெள்ள பாதிப்பை அறிந்த உடனே முதலமைச்சர் உடனடியாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தூத்துக்குடி மாநகருக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் களமிறங்கி பணியாற்றிய நிலையில் தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கியும், ஆடு, மாடு, வீடு இழந்தவர்களுக்கான இழப்பீடு தொகையையும், உயிரிழந்தவர்களுக்கான வெள்ள நிவாரண தொகையையும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, தேங்கிய நீரை அப்புறப்படுத்தியும், அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித்தொகைகளை தொகுதி வாரியாக வழங்கினார்கள்.

இந்நிலையில், வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளிலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட பகுதிகளை பார்வையிட்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அதிகாரிகளுடன் இணைந்து, அவ்வப்போது செய்த பணிகளை தமிழக முதலமைச்சருக்கு தெரிவித்து, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரை உடனடியாக களமிறங்கச் செய்து உரிய ஆலோசனைகள் வழங்கி பணியாற்றினார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தன. அதனால் அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி போய் கிடந்தன. அச்சமயத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இரவு பகல் பாராமல், முழுமையாக அனைத்துப் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு, புதிய மின் மோட்டார்கள், கழிவுநீர் வெளியேற்றும் லாரிகள், சில பகுதிகளில் சாலைகள் உடைக்கப்பட்டு புதிய பைப் அமைத்து அதன் மூலம் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு முழுமையாக பணிகள் மேற்கொண்ட நிலையில், முதல் கட்ட அத்தியாவசிய தேவையான உணவு, குடிதண்ணீர் கேன், பால், பிரட், பிஸ்கெட், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி சுருள், தீப்பெட்டி, பாய், லுங்கி, சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
வெள்ளநீர் குறைந்த பின்பு உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மூலம் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு அதன் மூலம் நிவாரண பொருட்கள் அரிசி, போர்வை ஆகியவற்றை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 52 வார்டுகளுக்கும் முழுமையாக வழங்கப்பட்டு, கூடுதலாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6 வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 58 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அமைச்சர் கீதாஜீவன் சார்பில் வெள்ளநிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மகளிர் சுயஉதவி குழுவைச் சார்ந்த பாக்கியலெட்சுமி கூறுகையில்: ஆண்டு தோறும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலங்களில் பெய்வது வழக்கமான ஒன்றாகும். இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் அதிகனமழையாக உருவெடுத்து எதிர்பாராத வகையில் அதிகளவு பொழிந்ததால் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் எங்கள் பகுதியும் அடக்கம். அந்த சமயத்தில் எங்கள் பகுதி மாமன்ற உறுப்பினர் உள்பட திமுக நிர்வாகிகள் இணைந்து முழுமையாக வெள்ளநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என நிவாரண பொருட்கள் தேவைக்கேற்ப அனைவருக்கும் அமைச்சர் கீதாஜீவன் சார்பில் வழங்கினார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தூத்துக்குடி தொகுதி முழுவதும் வெள்ளநிவாரண உதவித் தொகை ரூ.6000 பாரபட்சமின்றி வழங்கியது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி படிப்பிற்கு உதவித்தொகை, மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 60 உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியில் 32 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றனர். 50 சதவீதத்தையும் கடந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது என்னை போன்ற பெண்கள் மனதார திமுக ஆட்சிக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம். இல்லந்தோறும் அரிசி வழங்கி எங்கள் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டவர்களாக இருப்போம், என்று தெரிவித்தார்.

